search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடவடிக்கை. மத்திய அரசு"

    ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு இந்த வாரம் நடவடிக்கை எடுக்கும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Petrol #Diesel
    புதுடெல்லி:

    வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவரும் வேளையில், அதில் இருந்து சாமானிய மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் எந்த வரி குறைப்பையும் இதுவரை செய்யவில்லை.

    சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.79 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.71.87 ஆகவும் இருந்தது.

    நாட்டிலே மிகக்குறைவான விலை என்றால் அது டெல்லி விலைதான். அங்கு நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.87, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.68.08 ஆகும்.

    மாநிலத்துக்கு மாநிலம் பெட்ரோல், டீசல் விலை மாறுபடும். இதற்கு மாநில அரசுகள் விதிக்கிற உள்ளூர் வரி அல்லது மதிப்பு கூட்டு வரிதான் காரணம் ஆகும். மத்திய அரசைப் பொறுத்தவரையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48-ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33-ம் உற்பத்தி வரியாக விதிக்கிறது.

    தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.

    இது பற்றி மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது அரசுக்கு நெருக்கடியான சூழல் ஆகும். இதற்கு கூட்டு நடவடிக்கை தேவைப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு பற்றி பெட்ரோலியம் அமைச்சகத்துடன் நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

    உற்பத்தி வரி குறைப்புக்கான சாத்தியக்கூறுகளை நான் மறுப்பதற்கு இல்லை. இருந்தபோதும் அதை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. உற்பத்தி குறையை குறைத்தால் ஏற்படுகிற நிதி பாதிப்புகளை மனதில் கொள்ள வேண்டியது இருக்கிறது. பெட்ரோல், டீசல் சில்லரை விலையில் 20 முதல் 35 சதவீதம் மத்திய, மாநில அரசுகளின் வரியாக உள்ளது. எனவே இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை எழுந்து உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு இந்த வாரம் சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

    டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு ( ஒரு டாலரின் மதிப்பு ரூ.67.97 ஆகும்) வீழ்ச்சியை சந்தித்ததும் விலை உயர்வுக்கு காரணம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×